சிவகாசி:  நடப்பாண்டு  தீபாவளிக்கு ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானதாக டான்பாமா தலைவர் சோனி கணேசன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்களான காகித ஆலைகள், அச்சுத் தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி பட்டாசு உற்பத்தி நடக்கிறது. கடந்தாண்டு கொரானா பாதிப்பு, ஏழு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை, பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிப்பு போன்ற காரணங்களால் விற்பனை பாதிக்கப்பட்டு 70 சதவீதம் பட்டாசுகள் தேக்கம் அடைந்தன. இதனால் நடப்பாண்டு 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் சோனி கணேசன் கூறியதாவது, ‘‘‘‘2019ம் ஆண்டினை ஒப்பிடுகையில் மொத்த வர்த்தகத்தில் பட்டாசு விற்பனை இந்த வருடம் 30 சதவீதம் குறைந்தது. இருப்பினும் ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கு உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி பசுமை பட்டாசு தயாரிக்கப்படும். பட்டாசுக்கு தடைகள் முழுமையாக விளக்கினால் சிறப்பாக பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலை வாய்ப்பு வழங்க முடியும்,’’’’ என்றார்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3CQ3GvF