வேலூர்: வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றுபவர் ஷோபனா(57). இவர் தீபாவளி பண்டிகையொட்டி கான்ட்ராக்டர்களிடம் பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த 2ம்தேதி இரவு  ஷோபனா சென்ற அரசு காரை சோதனையிட்டு அதிலிருந்த ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விஜிலென்ஸ் போலீசார், தொடர்ந்து 3ம் தேதி அதிகாலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஷோபனா தங்கிய வீட்டை சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.15.85 லட்சம் ரொக்கம், ரூ.3.92 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஷோபனாவின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வீட்டில் கிருஷ்ணகிரி விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரொக்கம், 38 சவரன் நகைகள், 1 கிலோ 320 கிராம் வெள்ளி, ரூ.27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள டெபாசிட் பத்திரங்கள், 11 வங்கி கணக்கு புத்தகம், லாக்கர் சாவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஆவணங்கள் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகங்களை கைப்பற்றிய போலீசார் வேலூர் மாவட்டத்தில உள்ள வங்கி கணக்குகள், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வங்கி மேலாளர்களுக்கும் லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் ஷோபனா உறவினர்கள் பெயரில் பினாமியாக சொத்துக்கள் வாங்கியுள்ளாரா? அல்லது தனது பெயரிலேயே சொத்துக்கள் வாங்கியுள்ளாரா? சொத்துக்கள் வாங்கியது முறையான ஆவணங்கள் அடிப்படையிலா? அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கினாரா? என்பதை அறிய பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கடிதம் வாயிலாக விவரங்கள் கோரியுள்ளனர். தொடர்ந்து ஷோபனா வீட்டில் பறிமுதல் செய்த பணம் கான்ட்ராக்டர்கள் கொடுத்ததா? பைனான்ஸ் அல்லது சினிமா தயாரிப்பு போன்றவற்றிற்கு வைத்திருந்தாரா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். ஷோபனாவின் சொத்து விபரங்கள் தொடர்பான விவரங்கள் குறித்த தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்தால் சொத்து மதிப்பு பல கோடிகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தீவிர விசாரணையால் கான்ட்ராக்டர்கள் உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3BKj6zX