வானூர்: புதுவை அருகே பைக்கில் நாட்டு வெடிகளை எடுத்துச்சென்றபோது திடீரென வெடித்து சிதறியதில் தந்தை மற்றும் அவரது 7 வயது மகன் பலியாகினர். அவர்களின் உடல் பாகங்கள் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு பல இடங்களில் சிதறி கிடந்தன. மேலும் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். புதுவை அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் காக்காயந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன் (34), இவர் நேற்றுமுன்தினம், அரியாங்குப்பத்தில் தயாரான நாட்டுவெடிகளை வாங்கி 2 மூட்டைகளில் எடுத்துக்கொண்டு மரக்காணம் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் பிரதீஷ் (7) என்பவரும் சென்றார். மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு குப்பத்தில் உள்ள மாமனார் ராமலிங்கத்திடம் ஒரு மூட்டை நாட்டு வெடிகளை கொடுத்து விட்டு மற்றொரு மூட்டை வெடிகளுடன் வீராம்பட்டினத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை கலைநேசன் ஓட்ட முன்புறம் நாட்டுவெடி சாக்குபையின் மீது அவரது மகன் அமர்ந்திருந்தார். மதியம் 1.50 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது நாட்டுவெடி மூட்டை எதிர்பாராதவிதமாக சரிந்து வண்டியின் சைலென்சரில் விழுந்துள்ளது. சைலென்சர் சூடாக இருந்ததால் வெடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் தந்தையும், மகனும் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பைக்கும் சின்னாபின்னாமானது. இந்த விபத்தில் சாலையில் மற்றொரு பைக்கில் சென்ற கோட்டக்குப்பத்தை சேர்ந்த சர்புதீன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் பைக்கும் சேதமடைந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சென்று போக்குவரத்தை நிறுத்தினர். அங்கு படுகாயத்துடன் கிடந்த சர்புதீன், கணேசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்தில் சிதறி பலியான தந்தை, மகன் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, கோட்டக்குப்பம் டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் சண்முகம் தனது குழுவினருடன் வந்து கைரேகைகளை சேகரித்தார். தொடர்ந்து கூனிமேடு குப்பத்தில் உள்ள கலைநேசனின் மாமனார் ராமலிங்கம் வீட்டில் இருந்த ஒரு மூட்டை நாட்டு வெடிகளையும், அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த 2 மூட்டைகள் என மொத்தம் 3 மூட்டை நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி வீட்டில் நாட்டுவெடிகளை பதுக்கி வைத்ததாக ராமலிங்கம் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பைக்கில் சென்றபோது நாட்டுவெடிகள் வெடித்து தந்தை, மகன் பலியான சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.* 10 வீடுகளின் மீது கிடந்த உடல்பாகங்கள்சக்திவாய்ந்த நாட்டுவெடிகள் வெடித்ததால் தந்தை மற்றும் மகன் ஆகியோர் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு அவர்களின் உடல் பாகங்கள் வீடுகளின் மீதும், சாலையோர மின்கம்பத்தின் மீதும், சாலையிலும் சிதறி கிடந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகளில் சிதறிய உடல் பாகங்கள் கிடந்தன. அவற்றை போலீசார் சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெடிவிபத்தில் உடல் பாகங்கள் சிதறி கிடந்தது அப்பகுதி மக்களை பதைபதைக்க வைத்தது.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/2ZTgiTZ