சென்னை: தீபாவளியன்று அரசு அனுமதித்த நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2161 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 891 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. மாலையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆணையின் பேரில் தீபாவளியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் தீபாவளியன்று அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று வரை 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 204 வழக்குகளும், 2020ம் ஆண்டு 428 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று, தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியதாக நேற்று முன்தினம் 43 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்ட நிலையில் நேற்று வரை விதிகள் மீறி பட்டாசு கடைகள் நடத்தியதாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் மண்டல ஐஜிக்கள் சந்தோஷ்குமார், பாலகிருஷ்ணன், அன்பு, சுதாகர் ஆகியோர் மாநிலம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தியிருந்தனர். அதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர கூடுதல் நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 1270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் 2,161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3qbO56a