சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. மதுவிற்பனை புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தீபாவளி காலங்களில் அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாகத் தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் விற்பனை அதிகம் இருக்கும். மதுப் பழக்கத்தால் குற்றச்சம்பவங்கள், விபத்துகள், குடும்ப வன்முறைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது, உடல் நலம் பாதித்து மரணம் எனப் பல விஷயங்கள் இருந்தாலும் மதுவின் மீதுள்ள மோகம் குறையவில்லை. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.98.89 கோடிக்கும், சென்னையில் ரூ.79.84 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும், திருச்சியில் ரூ.89.95 கோடிக்கும் மது விற்பனையானது. கோவை மண்டலத்தில் ரூ.74.46 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.205.61 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.227.88 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி அன்று ரூ.225 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரூ.239.81 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையை விட இது ரூ.36.66 கோடி குறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மதுவிற்பனை கால அளவை கடைப்பிடிக்காமல் பல இடங்களில் மதுவிற்பனை அதிகாலை 3 மணி முதல் தொடங்கி நாள் முழுதும் நடப்பதும், அதிக அளவில் பார்கள், பப்கள் இயங்குவதும், மதுவின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதும் காரணமாகக் கூறலாம்.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/3bIRDnP