கூடலூர்: முல்லை பெரியாறு அணையை  தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் நவம்பர் 30ம் தேதிக்குள் 142 அடி தண்ணீர் தேக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த அக்.29ம் தேதி 138.70 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அன்றைய தினம் அணையின் 3வது மற்றும் 4வது மதகுகளை உயர்த்தி, அணையில் இருந்து வினாடிக்கு 517 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. அன்று நீர்வரத்து குறையாததால், அணையின் நீர்மட்டம் மீண்டும் 138.85 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அன்று இரவே 2ம் எண் மதகு திறக்கப்பட்டது. மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 844 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் மூர்த்தி, உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோருடன், மதுரையில் இருந்து அமைச்சர் துரைமுருகன் காரில் புறப்பட்டு, காலை 11.30 மணியளவில் தேக்கடி சென்றார். அங்கு அமைச்சர்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், தமிழக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான படகில் சென்று முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார், மதுரை தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், முன்னாள் எம்பிக்கள் கம்பம் செல்வேந்திரன், தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ மூக்கையா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து அணையின் மதகுகள், பேபி அணை, நீர்த்தேக்க பரப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அணைப்பகுதியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, அர.சக்கரபாணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப்சக்சேனாவுடன் ஆலோசனை நடத்தினர்.பின்னர் தேக்கடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியாறு அணையில் ரூல்கர்வ் (நீர்மட்ட கால அட்டவணை) முறைப்படிதான் கேரளப் பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள மூன்று மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி தர மறுக்கிறது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுத்து பேபி அணையைப் பலப்படுத்திய பின் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெரியாறு அணை குறித்து பிரச்னை, கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆட்சி காலத்திலேயே சுமுகமாக பேசி முடிவு எடுக்கப்படும். தமிழக பொதுப்பணித்துறைக்கு 2 ஸ்பீடு போட்கள் வாங்கப்படும். பல்வேறு தொழில்நுட்ப குழு அணையை ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலேயே, பெரியாறு அணை பலமாக உள்ளது. 142 அடி வரை தண்ணீர் தேக்கலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை. நவ.30ம் தேதியில் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்படும். அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் ஆய்வு செய்ய உள்ளேன். பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளையும் பார்வையிட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.* 80 வயதில் வந்திருக்கிறேன்... ஓபிஎஸ், இபிஎஸ் வந்தனரா? அமைச்சர் துரைமுருகன் கேள்விஅமைச்சர் துரைமுருகன் மேலும் கூறியதாவது, ‘‘நான் 80 வயதை தாண்டியும் கூட அணையை பார்வையிட வந்திருக்கிறேன். ஆனால், அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக மாறி, மாறி இருந்தும், பெரியாறு அணைக்கு செல்லாத ஓபிஎஸ், இபிஎஸ், பெரியாறு அணை குறித்து போராட்டம் நடத்த தகுதியற்றவர்கள்’’ என்றார். பின்னர் பெரியாறு அணையை பார்வையிட்டு திரும்பிய அமைச்சர் துரைமுருகன், கார் மூலம் நேற்றிரவு மதுரை திரும்பினார். முன்னதாக சென்னை விமானநிலையத்தில்  அமைச்சர் துரைமுருகன் பேட்டியளிக்கையில், ‘‘முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலவரம் தெரியாமல், போராட்டம் நடத்த போவதாக அதிமுக அறிவித்துள்ளது  வேடிக்கையாக இருக்கிறது’’ என்றார்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3EQ0C3a