சேலம்: டீசல் விலை உயர்வால் லாரிக்கு ஏற்று, இறக்க கூலி கொடுக்க முடியாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி சேலத்தில் தெரிவித்தார். சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 73வது மகாசபைக்கூட்டம் மற்றும் 2021-24ம் ஆண்டிற்கான சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறியதாவது: தினசரி ஏறி வரும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மென்மேலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஒன்றிய அரசை கண்டித்து விரைவில், ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.  ஒவ்வொரு முறையும் கச்சா எண்ணெய் விலை உயர்வையும் விட கூடுதலாக ஒன்றிய அரசு, வரியை உயர்த்தி மேலும் எங்கள் தொழிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு எங்கள் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு டீசல் விலையை குறைக்க வேண்டும். லாரிக்கு ஏற்று, இறக்கு கூலி நாங்கள் கொடுக்க இயலாது என்று தெரிவித்துவிட்டோம். பல பகுதிகளில் இது அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் வியாபாரிகள் தரப்பில் அவகாசம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நியாயமான வாடகை கிடைத்தால் போதும் என்பது மட்டுமே எங்களுடைய நிலைப்பாடாகும். வியாபாரிகள் வசமும் நாங்கள் பேச இருக்கிறோம். வரும் 9ம் தேதி மாநிலத்தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் கூடும் கூட்டத்திற்கு எங்களையும் அழைத்துள்ளார். அந்த கூட்டத்திற்கு நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்போம். டீசல் விலை உயர்வால் லாரி தொழிலே நடத்த முடியாத நிலையில் உள்ளோம். இந்த ெதாழிலை விட்டு நாங்கள் நகர்ந்துவிட்டால், அடுத்தடுத்து மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐயாயிரம் வண்டிகள் அளவிற்கு இறக்கி, அவர்கள் நிர்ணயம் செய்வதுதான் வாடகை என்ற நிலையை ஏற்படுத்துவார்கள் என்றார்.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3GA3we9