நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுவாமி உற்சவர் விக்ரகங்கள் மேலக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பூஜைகள் நடந்தன. நெல்லை மாநகர் பகுதிகளில் மழையால் ரோடுகள் மிகவும் மோசம் அடைந்து பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், மங்கலகுறிச்சி, பெருங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பயிரிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வரப்பு பகுதிகளை வெட்டி ஆலங்கால் வடிகால் வாய்க்காலில் வடிய வைத்தும், சில விவசாயிகள் ஆயில் இஞ்சின் மூலம் தண்ணீரை வெளியேற்றியும் வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 19 வீடுகள் இடிந்து விழுந்தன.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3nNGxDw