சேலம்:  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: பாதாள சாக்கடை திட்ட பணிகளை தாமதமின்றி முடிக்கும் வகையில், மண் பரிசோதனையை முழுமையாக செய்த பிறகு அந்த இடத்தில், பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகஅரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் நீர்வழித்தடங்களை தூர் வாரியுள்ளோம். வெள்ள சேதம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து தகுந்த முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும், குப்பைகளை தங்கு தடையின்றி அகற்ற பயோ மைனிங் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் குப்பையில்லா நகரங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டம் படிப்படியாக பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதேபோன்று கழிவுநீர் அகற்றுதல் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதன் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். சென்னை, சேலம், திருச்சி போன்ற மாநகராட்சிகள் மற்றும் பெரு நகரங்களில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சேலத்தில் தினமும் 122 எம்எல்டி கழிவுநீரை சுத்திகரிக்கலாம். இதன்மூலம் 70 முதல் 80 எம்எல்டி நீரை விவசாயத்திற்கு வழங்க இயலும். சென்னையில் 350 ஏக்கர், திருச்சியில் 26 ஏக்கர் என ஊருக்கு ஏற்றார்போல் இடத்தை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3CvhQCf