திருச்சி: வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் கடந்த 28ம்தேதி இரவு முதல் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 2வது நாளாக விடிய விடிய கனத்த மழை பெய்தது. திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவும், திருச்சியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் பலத்த மழையும் பெய்தது.  மழை காரணமாக அரியலூரில் மக்காச்சோளம் அறுவடை மற்றும் உலர வைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. பொன்னாறு பிரதான பாசன வாய்க்கால் மழைநீரால் நிரம்பி கரைகளை தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் கோட்டத்தில் 170 குளங்களில் 41 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி வழிகிறது. 90 முதல் 99 சதவீதம் வரை 35 குளங்கள் நிரம்பி உள்ளது. மற்ற குளங்களும் நிரம்பி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் திருவாரூர், பள்ளிவார மங்கலம், பழையவலம், வைப்பூர், ஓடாச்சேரி, புலிவலம், கீழ கூத்தங்குடி, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். தஞ்சையில் நேற்று மழை இல்லாததால் நேற்றுமுன்தினம் பெய்த கனமழைக்கு 4,000 ஏக்கர் சம்பா பயிரில் தேங்கியுள்ள நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.குமரி மாவட்டத்தில் தொடர் மழையால், 14 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தோவாளை சானலில் காட்டுப்புதூர் பகுதியில் உள்ள பழைய பாலம் பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2வது நாளாக விடிய, விடிய மழை கொட்டியது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 18.4 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்: பாபநாசம் அணை நீர்மட்டம் 135.10 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 1404 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடனா, ராமநதி ஆகிய அணைகளின் தண்ணீரும், தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளமும் கலக்கிறது. இதனால் தாமிரபரணியின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் கடலுக்கு செல்கிறது. இந்த அணையின் 18 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரை இருப்பதால் பல லட்சம் கனஅடி நீர் கடலுக்கு சென்று வீணாகும் நிலை ஏற்படும்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/2XXLdhg