திருச்சி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை துவங்கியது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் நேற்றுமுன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களில் நேற்று அதிகாலை 3 மணி முதல், கரூர், நாகை மாவட்டங்களில் அதிகாலை 4 மணி முதல், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணி முதல், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிகாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம், கொடிக்கால்பாளையம் அரசு மருத்துவமனை, அரசு போக்குவரத்து பணிமனை உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, திருவோணம் பகுதிகளில் 4,000 ஏக்கரில் நடவு செய்து 10 நாட்களான சம்பா பயிர் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதில் பல இடங்களில் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை  முதல் கனமழை பெய்தது. காரைக்கால் நகர பகுதி, திருநள்ளாறு, கோட்டுச்சேரி,  நிரவி திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும்  தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம்  மதியம் முதல் தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்தது. அணைகளில் இருந்து மொத்தம் 3,501 கன அடி  தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் நேற்று வெள்ளம்  ஆரிப்பரித்து கொட்டியது. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. மழை நீடிக்கும் என்பதால் பேரிடர் மீட்பு படையினரும் தயார்  நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி  மாவட்டங்களில் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது.இந்த கனமழையால் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, நெல்லை,  தூத்துக்குடி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டனர். கமலாலய குள சுவர் மீண்டும் இடிந்ததுஇந்த மழை காரணமாக கடந்த 24ம்தேதி திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலய குளத்தின் தெற்கு புறத்தில் உள்ள மதில் சுவர் 101 அடி தூரம் வரை சுவர் சரிந்து குளத்தில் விழுந்தது. மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தற்காலிக தடுப்பு சுவரும் நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சரிந்து குளத்தில் விழுந்தது.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/3nKvpYl