பவானி: பவானி அருகே காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு மருத்துவர் உள்பட 3 பேர் இறந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி உடையானூரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தேவநாதன் (53). தனியார் நிறுவனத்தில் மேனேஜர். இவரது மனைவி  இந்திராணி (51). மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக வேலை செய்து வந்தார். இருவரும் கோவைக்கு மருத்துவ சிகிச்சைக்காக நேற்று முன்தினம் காலை கோவை சென்றிருந்தனர். இவர்களுடன் தேவநாதன் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்த தேவநாதனும் (24) சென்றிருந்தார். 3 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் கோவையில் இருந்து மேச்சேரிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். காரை தேவநாதன் ஓட்டினார்.ஈரோடு மாவட்டம், பவானி - மேட்டூர் ரோட்டில் காடப்பநல்லூர் பிரிவு அருகே கார் வந்தபோது மேட்டூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதின. இதில் லாரியில் அடிப்பகுதியில் கார் புகுந்து சிக்கியது. காரில் பயணம் செய்த  3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின்பேரில் பவானி தீயணைப்பு படையினர் விரைந்து சென்ற மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரின் சடங்கலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/3jRGzsX