வாணியம்பாடி:  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன்  தலைமையில் போலீசார் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து சின்ன வேப்பம்பட்டு நோக்கி, சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் முரளிதரன் என்பவர் பைக்கில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். போலீசார் அவரது பைக்கை நிறுத்த முயன்றனர். ஆனால், முரளிதரன் வேகமாக சென்று மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, திரும்பி அதே இடத்துக்கு வந்தார். வாகனத்தின் ஆவணங்களை  எஸ்ஐ குணசேகரனிடம் காண்பித்து, அவர் ஆய்வு செய்வதை செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது, ‘‘என்ைன ஏன் படம் பிடிக்கிறாய்?’’ என எஸ்ஐ கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. செல்போனில்  படம் பிடித்ததை போலீசார் தடுத்தபோது, முரளிதரனுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எஸ்ஐ குணசேகரனும், முரளிதரனும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். பின்னர் போலீசாரிடம்  இருந்து தப்பமுயன்ற முரளிதரனை பொதுமக்கள் பிடித்து அங்கிருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்தனர்.  பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர்.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3pRZ8Rw