சென்னை: கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.  மீதமுள்ள நிலங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. அதன்படி தற்போது வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நில அளவைத்துறை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் கண்டறியும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களில் புதிதாக கட்டிடம் கட்டவோ, பத்திரம் பதிவு செய்யவோ தடுக்கும் வகையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: * கோயில் நிலங்களில் சட்ட விரோதமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.* கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு சொத்து வரி மற்றும் வீட்டுவரி ஆகியவற்றிற்கான ரசீதுகளை கோயில் பெயரில் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தனி நபர்கள் பெயரில் ரசீது வழங்கக் கூடாது.* குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் வரி கேட்பு ஆகியவை அனைத்து ஆவணங்களும் கோயில் பெயரில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும். தனிநபர் பெயரில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.* தனி நபர்களால் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கப்படும்போது, அச்சொத்து கோயிலுக்குச் சொந்தமானதா என்பதை கண்டறிந்து, கோயில் பெயரில் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் மின் இணைப்பு பெற முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.       * கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு என்பதையும், அதனை அளவீடு செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நில நிர்வாக ஆணையரகத்துடன் இணைந்து ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட வேண்டும். தனி நபர் பெயரில் பட்டா வழங்குவதை தவிர்த்தல் வேண்டும். மேலும், நில நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்கள் உதவியுடன் வருவாய்த் துறையும் மற்றும் அறநிலையத்துறையும் இணைந்து, கோயில் நிலத்தினை வருவாய்த்துறை ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் தனி நபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்களை கண்டறிந்து அவற்றை கோயில் பெயரில் மாற்றம் செய்தல் வேண்டும். வருவாய்த்துறையில் நடைபெறும் வருடாந்திர ஜமாபந்தியில் யாவும் களஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். மேலும், அத்தகைய நிலங்களில் கோயில் நிலங்கள் ஆய்வுக்கு ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களைப் பட்டியலிடுதல் வேண்டும்.* மாவட்டம்தோறும் அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோயில் நிலங்கள் தொடர்பான பதிவேடுகளை முறையான கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும்.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3nOHBHz