சென்னை:  தமிழகம் முழுவதும் 7-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாமை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்து ஆய்வு செய்தார். அப்போது மருத்துவத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மருத்துவத்துறை  அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 7-வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், இதுவரை 5.73 கோடி பேருக்குதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 87% முதல் தவணையும், 48% 2வது தவணையும்  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை. நவம்பர் மாதத்திற்காக 1. 40 கோடி தடுப்பூசியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி நவம்பர் மாத இறுதிக்குள் 100%, முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள்  பட்டியலில் தமிழகம் இடம் பெறும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக் மையங்களில் கூடுதலாக  பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பணியாளர்களின் விவரம்  கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு ஆட்கள் குறைக்கப்பட்டு, மாற்று இடத்தில் பணி வழங்க ஆலோசனை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எழும்பூர் தாய் சேய்நல மருத்துவமனையில் சீலிங் பேன் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3EqbOmK