சென்னை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து தொழில் தொடங்குவதற்கு, ஆன்லைன் மூலம் கூட்டு ஒப்பந்த பதிவு செய்யும் நடைமுறை சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் செய்ய விரும்பும் பட்சத்தில் அதற்கான ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்காக, மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் விண்ணப்பித்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இதற்காக, மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு அவர்கள் ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும். இதனால், கால நேரம் வீணாவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, தொழில் தொடங்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் கூட்டு ஒப்பந்தம் பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டதிருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்படது. இதன் மூலம் இனி வருங்காலங்களில் கூட்டு ஒப்பந்த பதிவுக்கு மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வர வேண்டிய அவசியமில்லை. மாறாக ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் கூட ஆன்லைனில் செலுத்தி கொள்ளலாம். மேலும், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் கூட்டாண்மை நிறுவன பதிவை கட்டாயமாக்குவதுடன் சட்டரீதியாக எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3mtMshR