சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரியும் 1,221 தினக்கூலி ஊழியர்களை பணிவரன்முறை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை  செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் தினக்கூலி/தொகுப்பூதிய அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக 1,221 தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த பணியாளர்களில் 35 வயதிற்குட்பட்டவர்கள் 265 பேர், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 956 பேர் உள்ளனர். கோயில்களில் பணியாளர்கள் விதிகள் 2020ன்படி கோயில் பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்வதற்கு வயது வரம்பு, காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை முதல் தேதியில் 35 வயது நிறைவு செய்தவராக இருத்தல் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, 35 வயதிற்கும் மேற்பட்ட பணியாளர்களை அவர்களின் பணி, தகுதி, நன்னடத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்வதற்கு வயது வரம்பு குறித்த விதியை தளர்வு செய்து அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் கேட்டு கொண்டார். அதன்பேரில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தகுதியான பணியாளர்களை  சில நிபந்தனைகளுக்குட்பட்டு பணி வரன்முறை செய்ய அனுமதி வழங்க அரசு ஆணையிடுகிறது.* 31.7.2019 அன்று 5 ஆண்டு காலம் தொடர்ந்து தினக்கூலி/தொகுப்பூதிய பணியாளராக பணிபுரிந்து இருக்க வேண்டும். நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும்.* சம்பந்தப்பட்ட பணிக்கு உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு உடையவராக இருக்க வேண்டும். அரசாணை வெளியிடப்படும் தேதியில் இருந்து பணி வரன்முறை செய்யப்பட வேண்டும்.* பணிவரன்முறைக்கான முன்மொழிவு அனுப்பும் போது நிரந்தர பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.* பணிவரன்முறை காலியிடத்தில் மட்டுமே நிரப்பும் வகையில் அமைய வேண்டும். * சான்றிதழ் உண்மையா என்பதை செயல் அலுவலர், தக்கார், அறங்காவலர் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.* கோயிலில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை ஒவ்வொரு இனமாக கோயிலின் ஆண்டு செலவினம் வரம்பிற்குள் வரப்பெறுகிறதா என்பதையும், கல்வி, வயது வரம்பு குறித்த தளர்வு ஏதும் செய்வது அவசியம் தானா என்பதையும் பரிசீலித்து ஒவ்வொரு பணியாளராக ஆய்வு பணி வரன்முறை செய்ய வேண்டும்.

* கோயில்களின் சம்பள செலவின சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
பணிவரன் முறைக்கான முன்மொழிவு அனுப்பும் போது நிரந்தர பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.


from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3mrku6k