சென்னை: நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், செயலாளர் தீரஜ்குமார், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட  திட்டம் இயக்குனர் பாஸ்கரன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டஇயக்குனர் கணேசன்,  பூம்புகார் கப்பல் கழக தலைவர் சிவசண்முகராஜா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அனைத்து நெடுஞ்சாலைத்துறை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டுமானங்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஓஎம்ஆர் சாலையில் 5 பாலங்கள் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எண்ணூர், தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், பெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில், மகாபலிபுரம் வரை செல்லும் சென்னை எல்லை சாலை பணிகள் விரைவில் தொடங்க வேண்டும். அரசு ஒவ்வொரு திட்டங்களுக்கும் தேவையான நிதியை உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத பணிகள் நிறைவு செய்ய வேண்டும். உலகத்தரம் வாய்ந்ததாக பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும்.அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து அவர், சென்னை மாநகர  எல்லைக்குள் நடைபெறும் பெருங்களத்தூர், மேடவாக்கம் மேம்பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர்  முதல் அக்கரை வரை நிலம் கையகப்படுத்தும் பணி குறித்தும் ஆய்வு செய்தார்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3pRKpX1