சேலம்: தமிழகத்தில் மீண்டும் ‘‘கலைஞரின் வரும்முன் காப்போம்’’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சேலம் வாழப்பாடியில் இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 1250 சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக வரும் முன் காப்போம் திட்டத்தை கடந்த 2006 டிசம்பர் 30ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்ட முகாமில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. தற்போது, இந்த திட்டம் ‘‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்’’ என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டு, ஆண்டுக்கு ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உடலில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சையும், மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சையும் அளிக்கப்படவுள்ளது. இதில் சர்க்கரை, புற்று நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்படுபவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட துவக்க விழா சேலத்தை அடுத்த வாழப்பாடியில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். அப்போது அவர், பட்ஜெட்டில் 1000 மருத்துவ முகாம் என கூறப்பட்டது. இப்போது, தமிழகத்தில் 385 வட்டாரங்களில் தலா 3  முகாம்கள், புதிதாக உருவாக்கப்பட்டவை உள்பட 20 மாநகராட்சிகளில் தலா 4  முகாம்கள், சென்னையில் 15 மண்டலங்களில் 15 முகாம்கள் என 1,250 முகாம்கள்  நடத்தப்படும் என்றார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 1250 முகாம் நடத்தப்படும் என அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு ரூ.1.62 கோடி நிவாரண நிதியும், உயர்கல்வி பயிலும் 14 மாணவர்களுக்கு ரூ.1.91 கோடி கல்வி கடன்களும் வழங்கினார். பின்னர், கூட்டுறவு துறை சார்பில் 2,335 பேருக்கு ரூ.10.20 கோடி பயிர், சுய உதவி குழுவுக்கு கடன் வழங்கினார். 117 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.11 கோடி பொருளாதார கடனுதவி என மொத்தம், 2,530 பயனாளிகளுக்கு ரூ.24.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, ஆத்தூரில் போக்குவரத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.31.98 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 29 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், வருவாய்த் துறை, போக்குவரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறையின் கீழ் ரூ.23.28 கோடி மதிப்பில் 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர், சேலம் கருப்பூர் சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் ஆய்வு செய்த முதல்வர், சேலம் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சிகளில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஷ்அகமது, சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். * 17 வகையான சிகிச்சைவரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ், பொது மருத்துவம், இதய சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மாற்றுத்திறனாளிகள் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், சித்த மருத்துவம், காசநோய், புற்றுநோய் மருத்துவம் உள்ளிட்ட 17 வகை சிகிச்சைகள் அளிக்கப்படும்.* மாற்றுத்திறனாளிகளிடம் பரிவு காட்டிய முதல்வர்வரும் முன் காப்போம் திட்ட துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, காமலாபுரத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காமலாபுரம் விமானநிலையம் அருகே கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பேசிய முதல்வர், அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக பரிவுடன் கூறினார்.இதேபோல் பெரியார் பல்கலைக்கழகம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா ஆகிய இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளை கண்டதும், அவர்களை அழைத்து கோரிக்கை மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு பகுதிகளில் சாலையில் மக்கள் திரண்டிருப்பதை கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காரை மெதுவாக ஓட்டுமாறு டிரைவரிடம் கூறி மக்களை பார்த்து கை அசைத்து அவர்களின் வாழ்த்துகளை பெற்றுச் சென்றார்.* கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதிகொரோனாவால் பெற்றோரை இழந்த சேலம் பழைய சூரமங்கலம், தாதகாப்பட்டி, ஜாரிகொண்டலாம்பட்டி மற்றும் சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்காக, தலா ரூ.6 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.* பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை, குகை, ஜாகீர் ரெட்டிப்பட்டி, தாதகாப்பட்டி பகுதி மற்றும் காடையாம்பட்டி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அதிமுக, அமமுக, பாஜக மற்றும் ரஜினி மன்றத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர், மாமாங்கம் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். அவர்களை முதல்வர் வரவேற்று பேசினார்.* பேனர், கொடிகள் இல்லாத சாலைகள்தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசு விழாக்கள் நடக்கும் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் படம் கொண்ட பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்து, கட்சி கொடிகள் கட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களில் கட்சியினர் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். சேலத்தில் நேற்று நடந்த விழாக்களில் இதனை கட்சியினர் முழுமையாக பின்பற்றியது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, விழா நடந்த வாழப்பாடி டவுன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் நெடுஞ்சாலைகளில், பிளக்ஸ் பேனர், கட்சி கொடி என எதுவும் கட்டப்படாவில்லை. இதனை கண்ட பொதுமக்களும், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும், வெகுவாக பாராட்டி, முதல்வரை வாழ்த்தினர்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3ojYrzC