மதுரை: நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி செல்வது கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகள் நடத்தாமல் ஆன்லைன் வழி உள்ளிட்ட இதர வழிகளில் மாணவர்கள் வகுப்புகளை தொடர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆனந்த் ஆஜராகி, ‘‘கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ெதாற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால், மாணவ, மாணவிகளை கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் மூலம் தொற்று பரவும் அபாயம் உள்ளது,’’ என்றார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘பல்வேறு துறை நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்ட பிறகு, அவர்களின் பரிந்துரைப்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முறையான வழிகாட்டுதல் மற்றும் விதிகள் பின்பற்றி நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 96 சதவீத ஆசிரியர்கள், அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சில நாட்களில் 100 சதவீதத்தை எட்டும். ஒவ்வொரு வகுப்புகளிலும் 50 சதவீத மாணவர்களை கொண்டே வகுப்புகள் நடத்த வேண்டும். நீண்டகாலமாக பள்ளிகள் திறக்காமல் இருந்தால் மாணவர்கள் கற்றல் திறன் பாதிக்கும். நேரடி வகுப்புகளில் முழுமையாக மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஆன்லைன் முறையிலான வகுப்புகள் தொடர்ந்து நடக்கும். விரும்பியவர்கள் ஆன்லைன் முறையில் தொடரலாம். பெற்றோர் சம்மதத்துடன் விரும்பியவர்கள் மட்டும் நேரடி வகுப்பில் பங்கேற்கலாம். விதிகளை பின்பற்றி முறையாக பள்ளிகள் திறக்கப்படும். இதேபோன்ற சில மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த மனுவை இங்கு விசாரிக்க வேண்டியதில்லை’’ என்றனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில், அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப். 7க்கு தள்ளி வைத்தனர்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3gOII7h