மதுரை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் கருத்தை பகிர்ந்த வழக்கில், ‘‘வேறொருவரின் பதிவை படிக்காமல் ஏன் பார்வர்டு செய்தீர்கள்?’’ என நடிகர் எஸ்.வி.சேகருக்கு, ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2018ல் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்ததாக பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நெல்லை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நெல்லை நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக சென்னையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதே பிரச்னைக்காக நெல்லையில் ஆஜராக வேண்டியதில்லை. எனவே, ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகரின் மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் தரப்பில், வேறொருவரின் பதிவை படிக்காமல் பார்வர்டு செய்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘படிக்காமல் ஏன் பார்வர்டு செய்தீர்கள்? வேறொருவரின் பதிவை பார்வர்டு செய்து விட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா?’’ என கேள்வி எழுப்பினார். பின்னர் மனு மீதான விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3t026TM