சென்னை: கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மேலும் 5 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பரவி வருவதையடுத்து சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அறியலாம். அதேவேளையில், வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிறதா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டு தான் அறிந்து கொள்ள முடியும். ரேபிட் கிட் எனப்படும் துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாகவும், எலிசா, சிஎல்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் கண்டறியலாம். இந்நிலையில் நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் பிசிஆர் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன. அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் 214 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 212 பிசிஆர் உபகரணங்கள் என மொத்தம்  426 உபகரணங்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3BvNazT