சென்னை: பதவி உயர்வு வழங்காத விரக்தியில் விருப்ப ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி தமிழக அரசிடம் 1 கோடியே ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.எப்.எஸ் அதிகாரியான ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1981ம் ஆண்டு உதவி வன பாதுகாவலராக பணியில் சேர்ந்தேன். 1989ல்  இந்திய வனப்பணியில் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றினேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2008ம் ஆண்டு அயல்பணியில் நியமிக்கப்பட்டேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் உரிய தகுதி பெற்றும் தலைமை வனப்பாதுகாவலர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து, பதவி உயர்வு கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.  கடுமையான மன உளைச்சலின் காரணமாக அதே ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றேன்.பல கட்ட போராட்டங்களுக்கு பின் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2020 பிறப்பித்த உத்தரவில் 2013ம் ஆண்டு முன்தேதியிட்டு என்னை தலைமை வன பாதுகாவலராக நியமித்து அரசாணை வெளியிட்டது. ஆனாலும் இதுநாள் வரை ஓய்வு கால பலன்களையும் தரவில்லை. எனவே, எனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கும், தொந்தரவுகளுக்கும், மன உளைச்சலுக்கும் இழப்பீடாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ரவி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான சங்கர், மோகன் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3BvNcaZ