சென்னை: டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் எஸ்பிசிஐடி (உளவு பிரிவு) தலைமை காவலர் ஒருவரை, சக நண்பர்களே காரில் கடத்தி போதை ஊசி செலுத்தி கடத்தினர். அவரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றும் வரை 18 மணி நேரம் சென்னை முழுவதும் காரில் சுற்றியுள்ளனர். 1 லட்சம் பணம் டிரான்ஸ்பர் ஆன பிறகு மயக்க நிலையில் நடுரோட்டில் உளவு துறை காவலரை நண்பர்கள் நடுஇரவில் தவிக்க விட்டு சென்றுள்ளனர். இந்தசம்பவம், போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி(45). இவர் கடந்த 94ம் ஆண்டு தமிழக காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது அவர் டிஜிபி அலுவலகத்தில் உள்ள மாநில உளவுத்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 28ம் தேதி காலை உளவுத்துறை தலைமை காவலர் ரவி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள தான் பணியாற்றும் உளவுத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது, அதேபகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசிக்கும் நன்கு அறிமுகமான நண்பரான அஜய் விக்கி(25) தனது காரில் சென்றார். அப்போது, தலைமை காவலர் ரவியை பார்த்து, நான் லைட் அவுஸ் பக்கம்தான் செல்கிறேன் உங்களை டிஜிபி அலுவலகத்தில் இறக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஒரே தெருவை சேர்ந்தவர் மற்றும் நண்பர் என்பதால் உளவுத்துறை தலைமை காவலர் ரவி, அஜய் விக்கியின் காரில் சென்றார். அப்போது, காரில் 2 மர்ம நபர்கள் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது உளவுத்துறை தலைமை காவலர் ரவியின் தண்டுவடத்தில் சுருக்கென்று குத்தியது. தன் முதுகை திரும்பி பாப்பதற்குள், ரவி மயக்கமாகி காரிலேயே சாய்ந்தார். இந்நிலையில், காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 2 பேர் ரவிக்கு போதை ஊசி போட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. பிறகு அதே காரில் ரவியை மயக்க நிலையிலேயே சோழிங்கநல்லூர், திருவான்மியூர், ஓஎம்ஆர், அண்ணாசாலை என சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு 18 மணி நேரம் கடத்தி சென்றுள்ளனர். அதற்குள், உளவுத்துறை காவலர் ரவியின் வங்கிக் கணக்கில் இருந்து  1 லட்சத்தை தங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிட்டுள்ளனர். தங்கள் வேலை முடிந்ததால், உளவுத்துறை காவலர் ரவியை, நள்ளிரவில் அடையார் அருகில் சாலையில் அரை மயக்கத்தில் கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். மயக்கம் தெளிந்த தலைமை காவலர் தனது செல்போனை பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுல் பே மூலம் 1 லட்சம் பணத்தை அஜய் விக்கி மற்றும் அவரது 2 நண்பர்களும் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டு விட்டது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை காவலர், ஆட்டோவில் ஏறி நேற்று முன்தினம் நள்ளிரவு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராமியிடம் புகாராக கொடுத்துள்ளார்.உளவுத்துறை தலைமை காவலர் ரவியின் புகாரின் படி சூளைமேடு போலீசார் சூளைமேடு பஜனை கோயில் அருகே காரில் ஏறியது, அடையார் பகுதியில் சாலையில் வீசிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை காரில் கடத்திய 15 ஆண்டுகால நண்பரான அஜய் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாக இருந்து வருகின்றனர். அதேநேரம் புகார் அளித்த மாநில உளவுத்துறை தலைமை காவலர் ரவி மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த புகார் அளிக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா என்று புகார் அளித்த உளவுத்துறை தலைமை காவலர் ரவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில உளவுத்துறை தலைமை காவலர் ஒருவரை சக நண்பர்கள் காரில் கடத்தி 1 லட்சம் பறித்து சென்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3kTNIJd