புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின்போது   இந்திய ஒன்றியம் என்று குறிப்பிட்டது ஏன் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை   ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் இரு தினங்களுக்கு முன்பு புதிய   அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும்   செய்து வைத்தார். அந்த நிகழ்வில்   அரசியலமைப்பு சட்டத்தின்படி, பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக   பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில், எந்த மாறுதலும் இல்லாமல்   தமிழில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த பெருமையை  மறைக்கும்  அளவிற்கு ”இந்திய ஒன்றியம்” என்ற வார்த்தை வேண்டுமென்றே  திரித்து  கூறப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும்  பயன்படுத்தவில்லை.   ”Indian Union Territory of Pudhucherry” என்ற  வாசகம் ”இந்திய  ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு” என மிக அழகாக,  வெகுகாலத்திற்கு முன்பே  புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு  சட்டமாக்கப்பட்டது. இந்த  படிவம்தான் வெகுகாலமாக தொடர்ந்து  பயன்படுத்தப்பட்டு வருகிறது.  பிரெஞ்சு  ஆதிக்கத்தில் இருந்து அதன்  பின்பு இந்திய ஆட்சிக்குட்பட்டதால் அதை ”இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு”  என்கிறோம். ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன்  பிரதேசமான  புதுச்சேரியைத்தான், இங்கு எங்கேயுமே மத்திய அரசு என்று   குறிப்பிடப்படவில்லை.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3x7oADp