வள்ளியூர்: கூடங்குளம்  அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5, 6வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணி பூமி பூஜையுடன் நேற்று  தொடங்கியது.  நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தலா 1000 மொகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4வது அணு உலை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில், அணு மின் நிலையத்தில் ரூ. 49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட  5, 6வது  அணு உலைகள் கட்டப்படுகிறது.  இதற்கான முதல் கான்கிரீட் கட்டுமானப் பணியை  இந்திய அணுசக்தி ஆணைய தலைவர் மற்றும் அணுசக்தி துறை செயலாளர் கே.என்.வியாஸ், ரஷ்யாவின் ‘ரோசடாம்’ நிறுவன இயக்குநர் அலெக்சி லிக்காசேவ், இந்திய அணுசக்தி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் சர்மா,    இந்திய அணுமின் உற்பத்தி கழக மேலாளர்  எஸ்.என் சுப்பிரமணியன்  ஆகியோர் வீடியோ  கான்பரன்சிங் மூலம் தொடங்கி  வைத்தனர். விழாவில் இந்திய அணுசக்தி துறை, இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் 5வது அணு உலையில் 66 மாதங்களிலும், 6வது அணு உலையில் 75 மாதங்களிலும் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே ரூ. 39 ஆயிரத்து 849 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் 3, 4வது அணு உலை கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன. கூடங்குளத்தில் இந்த நான்கு அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் முடியும் போது 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நாட்டுக்கு கிடைக்கும் என அணு மின் நிலையம் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3jreRUH