கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அண்ணா நகர், பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், காரணைப்புதுச்சேரியில் இருந்து ஊரப்பாக்கம் செல்லும் மெயின் ரோடு ஓரத்தில் அரசுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.  அங்கு, காரணைப்புதுச்சேரி கிராம மக்கள் சுடுகாடு மற்றும் எரிமேடை அமைத்து, பல ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர். இதில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் குடியிருக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு என தனித்தனி சுடுகாடு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலா 22 சென்ட் நிலத்தில் சுடுகாடு அமைத்து தரப்பட்டது. மீதமுள்ள இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இந்துக்களுக்கு சுடுகாடு போதிய அளவில் இல்லை என்றும், கூடுதல் இடம் கேட்டும் வருவாய்த்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பெரியார் நகரை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் நேற்று காலை இறந்தார். இதில், அவரது உடலை அடக்கம் செய்ய, உறவினர்கள் முஸ்லிம்களுக்கான சுடுகாட்டில் நேற்று காலை பள்ளம் தோண்டினர். இதை பார்த்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மநாபன், டில்லிபாபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் முருகன் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அங்கு சென்று, அந்த இடத்தில சடலத்தை புதைக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி கூறினர். இதையடுத்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் வசந்தி, விஏஓ ஜோஸ்பின் உள்பட வருவாய் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது, பொதுமக்கள், இந்துக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் சுடுகாட்டில் எரிமேடை அமைத்து சடலங்களை எரியூட்டுகிறோம். எங்கள் சுடுகாட்டை ஒட்டியபடியே முஸ்லிம்கள் சுடுகாடு அமைத்து, அதில் தொழுகையும் செய்ய முயற்சித்தனர். இதனை நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி தடுத்துவிட்டோம். தொடர்ந்து மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யக்கூடாது என அதிகாரிகள் பூட்டு போட்டனர். ஆனால், அதனை மீறி பூட்டை உடைத்து சடலத்தை புதைஙக பள்ளம் தோண்டினர். அதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம் என்றனர். இதனையடுத்து, நில அலுவலர்கள் மூலம் தாசில்தார் அனைத்து இடங்களையும் அளவீடு செய்து, இஸ்லாமியர்களுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்தார். பின்னர், மதியம் சுமார் 2 மணியளவில் சடலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு, மீண்டும் மோதல் ஏற்படும் என கருதியதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னை, தாசில்தார் மூலம் நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இதனால், நேற்று அங்கு 7 மணி நேரமாக பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3dqQGSs