சென்னை: கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை குறையும் மாவட்டங்களின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று வேகமாக குறைந்து வரும் மாவட்டங்களான, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சகஜநிலை திரும்பி வருவதால் இந்த மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.இதனால் நேற்று காலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுத்து வந்தன. நேற்று முன்தினம் இரவு முதலே அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களிலேயே சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பஸ், ரயில்களில் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளதால் பஸ், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் அரசின் விதிமுறைகளை மக்கள் கடைபிடித்து செல்கின்றனர்.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/3wXVq9P