செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம்  கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 10 ஏக்கர் பரப்பில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம்,  500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை விற்பனை செய்தது. இதில், வீடுகள் கட்டி சிலர் வசிக்கின்றனர். இந்த மனைபிரிவின் முகப்பு பகுதி, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பிரதான சாலையோரம் கால்வாயை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. வீட்டு மனை நுழைவாயில், தடுப்பு சுவர், காம்பவுண்ட்,  ஆர்ச் ஆகியவை மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ளது. இதனால், மழை காலங்களில், மழைநீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, கிராம பகுதியில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், மழைநீர் வடியக்கூடிய வடிகால் கால்வாயை ஆக்கிரமித்து நுழைவாயில் மற்றும் காம்பவுண்ட் கட்டியுள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து இருப்பது தெரிகிறது. இதனை,  உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்பையும் காம்பவுண்ட் மற்றும் நுழைவாயிலை  அகற்றும்படி பொதுப் பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி செங்கல்பட்டு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குஜராஜ் தலைமையில், வருவாய் துறையினர் முன்னிலையில் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன்  இயந்திரம் மூலம்  ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளினர். இதன் மூலம், 25 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3AfuRz8