சென்னை: பாகுபலி படத்தை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம், ஆர்ஆர்ஆர். இப்படத்தின் போஸ்டர் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் பைக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றது. இதைப் பார்த்து தெலங்கானா மாநிலம் சைபராபாத் டிராபிக் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஹெல்மெட் அணியச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்களே இப்படி செய்யலாமா என்று நினைத்த அவர்கள், போட்டோஷாப் டெக்னாலஜி மூலம் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோருக்கு ஹெல்மெட் அணிவித்து, உடனே அந்த போஸ்டரை சைபராபாத் டிராபிக் போலீஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இச்சம்பவம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆர்ஆர்ஆர் படத்தின் கதை இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கிறது. அப்போது ஹெல்மெட் கட்டாயம் இல்லை என்பதாலேயே இக்காட்சி வெளியிடப்பட்டது என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது. மேலும், பைக்கில் நம்பர் பிளேட் இல்லை என்பதையும் படக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3qFVGbk