சென்னை:  இந்தியன் 2 பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இந்தியன்  2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால நிவாரணம் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். அதேநேரம், இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3dxw5Mb