சென்னை: ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்பாது புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், அதிகப்படியான காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களில் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. குறிப்பாக காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் அதிகம் ஏற்படுகின்றன. சாலைகளில் விபத்துகள் நடப்பது அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. எனவே தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முன்னுரிமை வேண்டும். திறந்த வெளியில் பட்டாசுகள் வெடித்து, சுற்றிலும் எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, எந்த எரியக்கூடிய பொருட்களும் இல்லாத இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். நீண்ட மற்றும் தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பிரத்தியேக கவனம் செலுத்தி கண்காணிப்பில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். சுவாச பிரச்னைகள் கொண்டவர்கள், வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, சென்னையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, வழிபாடு செய்த பிறகு பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. லேசான தூறலுடன் நீடித்த மழை பெரும்பாலான இடங்களில் கனமழையாகவும் இருந்தது. இதனால் காலையில் பொதுமக்களால் அதிக அளவில் பட்டாசுகளை வெடிக்க முடியவில்லை.மதியத்திற்கு பிறகு தூறல் குறைய ஆரம்பித்தது. இதையடுத்து பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தனர். மழைகாரணமாக காலையில் பட்டாசுகளை வெடிக்காத பலர் இரவில் அதிக அளவில் வெடிக்க தொடங்கினர். குறிப்பாக உச்ச நீதிமன்றம் 2 மணி நேரமே வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் மக்கள் மொத்தமாக ஒரே நேரத்தில் வெளியில் வந்து நேற்று இரவு வெடித்தனர். சர வெடி, புஸ்வானம், சங்கு சக்கரம், ராக்கெட், மத்தாப்பு போன்றவற்றை வெடித்து தள்ளினர். உற்சாகத்தில் பலர் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் டமால், டமால் என்ற வெடி சத்தத்துடன் வானவெளி வண்ணமயமாக காட்சியளித்தது.மற்றொருபுறம் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையின் பல்வேறு பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தன. மேலும் காற்று மாசுபாடும் ஏற்பட்டது. காற்றில் பிஎம்-10 மற்றும் பிஎம்-2.5 ஆகியவற்றின் அளவு மிகவும் அதிகமாக இருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டைவிட 10 மடங்கு அதிகம் இருந்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே மழைகாரணமாக வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், பட்டாசு புகையால் வானம் பார்க்க முடியாத அளவுக்கு புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் சுவாசம் சம்பந்தமான  நோய் கொண்டவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை பனியுடன் சேர்த்து புகையும் சேர்ந்து கொண்டதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 8 மணிக்கு பிறகு புகை மூட்டம் குறைந்தது.* 45 சிகரெட் பிடித்த பாதிப்புதீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பட்டாசு நச்சு புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுக்கு சென்றுள்ளது. காற்றின் அளவு 50 ஆக இருந்தால் நல்ல காற்று, 100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றின் ஏக்யூஐ அபாயகரமான அளவான 500+ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 ஆகவும், மணலியில் 578 ஆகவும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 20 மடங்கு அதிகம். அடுத்த சில நாட்களில் மருத்துவமனைக்கு நுரையீரல் நோயால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. இந்த அளவு காற்று மாசுள்ள பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்திருப்பார்களோ அவ்வளவு நச்சை சுவாசித்துள்ளார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.* மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது. தீபாவளி நாளான 4.11.2021 அன்று காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் 5.11.2021 காலை 6 மணி வரை 342 லிருந்து 385 வரை மிக மோசமான அளவுகள் என கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணிகளாக காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் ஆகும். இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2021ம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்கு காரணம் ஆகும். ஒலி மாசுபாட்டை பொறுத்தவரையில், பெசன்ட் நகர் தீபாவளிக்கு முன் (28.10.2021) 55 டெசிபல் ஆக இருந்தது தீபாவளி அன்று 73 டெசிபல் ஆகவும், தி.நகரில் 66 டெசிபல் ஆக இருந்தது 79 டெசிபல் ஆகவும், நுங்கம்பாக்கம் 60 டெசிபல் ஆக இருந்தது 74 டெசிபல் ஆகவும்,  திருவல்லிக்கேணியில் 56 டெசிபல் ஆக இருந்தது 69 டெசிபலாகவும், சவுகார்பேட்டையில் 60 டெசிபலாக இருந்தது 72 டெசிபலாகவும் பதிவாகியது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3BP9tQw