சென்னை: மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு மூலம் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த மாதம் 24ம் தேதி பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் மற்றும் அதே சமூதாயத்தை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது, கோயில் நிர்வாகத்தினர் அவர்களை உட்கார விடாமல் அடித்து துரத்தி அவமானப்படுத்தினர். இதையடுத்து, அந்த நரிக்குறவ பெண்கள் சாமி எங்களை முதல் பந்தியில் அமர வைக்க வேண்டாம். கடைசி பந்தியிலாவது, எங்களை உட்கார வையுங்கள் வயிறு பசிக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். அதற்கு, கோயில் நிர்வாகம் முதல் பந்தியில் மட்டும் இல்லை கடைசி பந்தியிலும் உங்களை உட்கார விடமாட்டோம் என கூறியுள்ளனர்.  இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை காட்சியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த காட்சி, மிக பெரிய வைரலானது. மேலும், அந்த காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் ஆய்வுக்காக வந்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அந்த பெண் மற்றும் அந்த சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அவரும் அன்னதானம் சாப்பிட்டார். அப்போது, அஸ்வினி என்ற பெண்ணிடம் நீங்கள் வசிக்கும் பகுதியில் எதாவது குறைகள் உள்ளதா என கேட்டார். அதற்கு, அந்தப் பெண் நாங்கள் 25 வருடமாக பூஞ்சேரியில் மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகிறோம். எங்களுக்கு, வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, அதேப்போல் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லையென அமைச்சரிடம் முறையிட்டார். இவை அனைத்தும், முதல்வரிடம் ஆலோசித்து உடனே நிவர்த்தி செய்யப்படும் அப்பெண்ணிடம் உறுதியளித்தார். இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு  வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளையும்  வழங்கினார். முன்னதாக, நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வருக்கு அப்பெண் பாசிமணி அணிவித்தார். பின்னர், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுடன் முதல்வர் அமர்ந்து குழுப் புகைப்படம் எடுத்து கொண்டு, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார். அப்போது, தனக்கு அருகே இருந்த நரிக்குறவ பெண் ஒருவரின் செல்போனை வாங்கி முதல்வர் அப்பெண்ணுடன் செல்பி எடுத்தார். அந்த, புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய பயனாளிகள் பவானி மற்றும் அஸ்வினி ஆகியோர் முதல்வரை தங்கள் வீடுகளுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அவர்களது அழைப்பினை ஏற்று, முதல்வர் அவர்களது வீடுகளுக்கு நடந்தே நேரில் சென்று, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அப்போது, அஸ்வினி வீட்டில் அமர்ந்து அப்பெண்ணுடன் சிரித்துப் பேசினார். அந்த பெண் கண்ணீர் மல்க கை கூப்பி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, முதல்வர் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மேலும், இந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.* 282 பேருக்கு ரூ.4.53 கோடி நலத்திட்ட உதவிபூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த  282 பேருக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள், 6 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 21 பேருக்கு குடும்ப அட்டைகள், 18 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 பேருக்கு இருளர் சாதி சான்றிதழ், 34 பேருக்கு நரிக்குறவர் சாதிச் சான்றிதழ், 34 பேருக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள், 25 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய  அட்டைகள், சுயவேலை வாய்ப்பு உருவாக்க செயற்கை முறை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 பேருக்கு பயிற்சி ஆணைகள், முத்ரா திட்டத்தின் கீழ் 12 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம்  கடனுதவி, சிறுதொழில் செய்வதற்கான வங்கிக்கடன் திட்டத்தின் கீழ் 33 பேருக்கு ரூ.10,000 வீதம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனுதவி, 75 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழிவு ஒப்புதல், மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் நிறுவனத்தின் மூலம்  பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு புதிய  வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணை, என மொத்தம் 282 பேருக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா  பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத்,  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி  ஒன்றிய தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/303AH9d