சென்னை: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 10 முக்கிய துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு துறைகளுக்கும் நேர்மையான, திறமையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அதிகாரிகள் நியமனம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் அதிமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன், தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அந்த துறையின் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்த அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளராகவும், அந்த துறையில் செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்து துறை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை செயலாளராகவும், போக்குவரத்து துறை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, மின்சாரத்துறை செயலாளராகவும், அந்த துறையின் செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதித்துறை செயலாளராகவும், அந்த துறையில் செயலாளராக இருந்த அபூர்வா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைத்தறி மற்றும் ஜவுளி ஆணையர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, நில சீர்திருத்தத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |07 Nov 2021 https://ift.tt/3bPewpy