சென்னை: சென்னையில் தீபாவளியன்று பட்டாசு புகை மண்டலத்தில் சிக்கி விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிப்படும் சம்பவங்கள் இந்த ஆண்டு இல்லாததால் பயணிகளும், விமானநிலைய அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகை அன்று ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் இதேபோல் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படும். அந்த பட்டாசு புகை, அதோடு பனியின் தாக்கம் இரண்டும் சேர்ந்து, சென்னை விமானநிலைய ஓடுபாதையை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு புகை மூட்டம் சூழந்து கொள்ளும்.இதனால், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரை சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவது வழக்கம். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சில விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், திருச்சி விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படும். அதுபோல், சென்னை சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்களிலிருந்து புறப்படும் பல விமானங்களும் புறப்பட முடியாமல் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்படும்.அதன்பின்பு காலையில் பட்டாசு வெடி சத்தம் ஓய்ந்து, புகை மூட்டம், பனியின் தாக்கம் குறைந்ததும், காலை 10 மணிக்கு மேல் விமான சேவைகள் வழக்கமான இயல்புக்கு திரும்பும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இதன் காரணமக, சில விமான நிறுவனங்கள் தீபாவளி அன்று அதிகாலை சென்னை வந்து, புறப்பட்டு செல்லும் நேரத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இருந்தாலும், அதிசயத்தக்க விதத்தில் சென்னை விமானநிலையத்தில் தீபாவளி அன்று காலையிலும், மாலையிலும் விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் வந்து தரையிறங்கின. குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு சென்றன. விமானநிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகள் ஓரளவு வெடிக்கப்பட்டன. ஆனால் பெருமளவு புகை மண்டலம் விமானநிலைய ஓடுபாதையை சூழவில்லை. அதேபோல் பனியின் தாக்கமும் அதிகமாக இல்லை. ஓடுபாதையில் புகை மண்டலம் பாதிப்பு ஏற்படாமல், அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கின. இது பயணிகளுக்கும், விமானநிலைய அதிகாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேநிலை வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/31pWzvQ