மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்காமல் விரட்டியடிக்கப்பட்ட நரிக்குறவப்பெண்ணுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்து சாப்பிட்டார். சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சி சம்பவம் வைரலாக பரவிவருகிறது.  மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர். நரிக்குறவர். இவரது, மனைவி அஸ்வினி (25). இந்த, பெண் மாமல்லபுரம் புராதனசின்னங்கள் பகுதியில் வீதி வீதியாக சென்று பாசி மணி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த வாரம் இந்த நரிக்குறவப் பெண்  மிகுந்த பசியுடன் மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை கோயில் நிர்வாகத்தினர், ‘‘நீங்கள் எல்லாம் இங்கு உணவு சாப்பிடக்கூடாது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் தான் அன்னதானம் வழங்கப்படும்’’ என்று விரட்டி அடித்தனர். மிகவும் மனம் உடைந்த அந்த  நரிக்குறவப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த, வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகப் பரவி மக்கள் மத்தியில் பெரும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்த, வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது.  இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் அடிப்படைவசதிகள் குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வந்தார்.  அதற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சேகர்பாபு அந்த நரிக்குறவ பெண்ணை அழைத்து நலம் விசாரித்து. அந்த பெண்ணுக்கு  ஆறுதல் கூற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். அமைச்சர் சேகர்பாபு அந்த பெண் மற்றும் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களை அழைத்து உணவளித்தார். விரட்டியடிக்கப்பட்ட அஸ்வினி என்ற பெண்ணுடன் அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு, உணவு சாப்பிட்ட  சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அழுக்கு ஆடை அணிந்தவர் அருகில் கூட அமர்ந்து உணவு அருந்த மறுக்கும் இந்த உலகில். தான் ஒரு அமைச்சர் நரிக்குறவ பெண்ணின் அருகில் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு உணவு அருந்திய அந்த காட்சி  தற்போது, சமூக வலைதளங்கில் காட்டுத் தீப்போல் பரவி வருகிறது. மேலும், அமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3nJ1KP1