சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு அரசின் சார்பில் நகர்ப்புற கட்டமைப்புகளுக்கான திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் “நமக்கு நாமே” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு சுமார்ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.50% மேல் பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் அந்த பணிகளை  சென்னை மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் அவர்களே மேற்கொள்ளலாம்.இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல், போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், புதிய தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். நமக்கு நாமே திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்களின் விவரம் திட்டப்பணி முடிவுற்றவுடன் அவ்விடத்தில் பெயர் பலகையில் காட்சி படுத்தப்படும்.நமக்கு நாமே” திட்டத்தில் பங்கேற்று விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத்திட்டத்தை தேர்வு செய்து சென்னை மாநகராட்சி ஆணையர்,துணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம்.மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு 9444100198 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3pQfcDz