சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அறங்காவலர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில், சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்பிரியா, நிர்வாக அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் முடிவுற்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளன.  நிச்சயம் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த 10 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நிச்சயம் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். நீதிபதிகள் முன்னிலையில் கோயில் நகைகளை கணக்கிடும் பணி நடந்து வருகிறது.மேலும், தற்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு முன்பாகவே மாவட்ட அளவிலான மற்றும் ஒவ்வொரு கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே அறங்காவலரை நியமித்த பின்னரே நகைகளை உருக்கும் பணிகள் தொடரும். அம்மா உணவகத்தில் ஊழியர்களின் ஆட்குறைப்பு என்பது நிர்வாக காரணம் மட்டுமேதான். அரசியல் காழ்ப்புணர்ச்சி  கிடையாது. மறைந்த தலைவர்கள் பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மறைக்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/3buyR3f