வாலாஜாபாத்:  வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட 61 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர். இந்நிலையில்,  வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சியை சேர்ந்த 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து,  மீதமுள்ள 10 சதவீதம் பேர்,  தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்பதற்காக, தடுப்பூசி செலுத்தி கொள்ளும்  அனைவருக்கும் 25 கிலோ பொன்னி அரிசி இலவசமாக, ஊராட்சி நிர்வாகம் சார்பாக  வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.  அதனடிப்படையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட, அப்பகுதி மக்களுக்கு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் முன்னா ஆகியோர் 25 கிலோ பொன்னி அரிசி மூட்டை வழங்கி பாராட்டினர். ஊராட்சி நிர்வாகத்தின் இந்த அரிய முயற்சி, அப்பகுதியை சேர்ந்தவர்களின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.காஞ்சிபுரம்: கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார்  தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 550 இடங்களில் இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கீழம்பி கிராம ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மாகலட்சுமி ராஜசேகர் ஆகியோர் குடை பரிசாக வழங்கினர்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3GBlGfy