சென்னை: அமெரிக்க நீதிமன்றத்தின் கோரிக்கையைடுத்து, பாங்காக் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.ஹமீத் இப்ராஹிம் அன்ட் அப்துல்லா மெரிலாக் ஏவியன் சர்வீஸ் என்ற நிறுவனம், பெல் 214 என்ற ஹெலிகாப்டரை மாத வாடகை அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த ஏஏஆர் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து, 2019ல் இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள இந்த ஹெலிகாப்டரை இயக்க தடை விதித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு இந்திய அமலாக்கத் துறைக்கு அமெரிக்காவை சேர்ந்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறை வேண்டுகோள் விடுத்தது.இதையடுத்து, இந்த ஹெலிகாப்டரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வந்தனர். மெரிலாக் ஏவியன் சர்வீஸ் இயக்குநர்களின் வீடுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தும் இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பெல் 214 ஹெலிகாப்டர் சென்னையில் உள்ள ஜெ மாதாதீ இலவச வணிக கிடங்கு மண்டலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் பல்வேறு பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, பெல் 214 ஹெலிகாப்டரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3CvrIvH