விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி வரும் 1ம்தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் தமிழகசட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மீது புகார் எழுந்தது. இதுகுறித்து சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து அவர்களை தமிழகஅரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டிஜிபி தரப்பில், இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரியும், எஸ்பி கண்ணன் தரப்பில் இந்த வழக்கிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரியும் இரண்டுபேரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர். இந்தமனுவை விசாரித்த விழுப்புரம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தனித்தனியாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களது மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்பி கண்ணன் நேரில் ஆஜரானார். ஆனால் டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, டிஜிபி வராதது குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும், மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்ததால், சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். எனவே  இதற்கு 15 நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டனர். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கோபிநாதன், சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி டிஜிபி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று தெரிவித்த நீதிபதி வரும் நவம்பர் 1ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/2ZHZqQf