மதுரை: கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், நேரடி வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி தனியார் பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பின் சார்பில் ஒரு மனு செய்யப்பட்டது.  அதில், ‘‘கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த கல்வி முறையும் பாதித்துள்ளது. ஆன்லைன் கல்வி என்பது குழந்தைகளுக்கு போதுமானதல்ல. பல மாணவர்கள் மனரீதியாகவும், கண்கள் பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். ஏழை மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் வசதி குறைவு. 175 நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 1.60 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குழந்தைகள் பாதிப்பர் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை. எனவே, நேரடி வகுப்பிற்கு எதிரான மனுவை ஏற்கக்கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்து நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/3AWR6ty