சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே மாதம் 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் முழுவதும் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 7 லட்சத்து 28 ஆயிரத்து 703 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 2.61 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட 7.28 லட்சம் விண்ணப்பங்களில் 6.65 லட்சம் பேருக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 64 ஆயிரம் கார்டுகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக தென்சென்னையில் 67,051 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 36,815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 27,829 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 12,754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 8,986 பேருக்கு கார்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று வடசென்னையில் 55,962 பேர் புதிதாக கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 10,741 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கார்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 130 நாட்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 65,003 பேர், சேலம் 59,495 பேர் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு படிப்படியாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/2XUnSwF