சென்னை:  அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அரசு வேலை தேடுவோருக்கு அரசின் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விளம்பரத்திற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3F6nwE6