சென்னை: நடப்பு கல்வி ஆண்டிற்கு  அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரிகளில் 2021-22 கல்வி ஆண்டிற்கு தேவையான 1661 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டார். அவரது செயற்குறிப்பினை அரசு கவனமாக ஆய்வு செய்து, அதனடிப்படையில், 2021-22 கல்வி ஆண்டிற்கு 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1661 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.20 ஆயிரம் வீதம், 2021-22 கல்வி ஆண்டில் மார்ச் 2022 வரை 11 மாதங்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்த அரசு ஆணையிடுகிறது. மேலும் இதற்கென ரூ.36 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் நிதியும், இதேபோன்று ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு 32 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் என மொத்தம் 36 கோடியே 86 லட்சத்து 70 ஆயிரத்து 800 ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/2WnjqWL