சென்னை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்ட யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் மூலம் கோயில் சொத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பெரும்பாலானவை குத்தகை, வாடகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஒரு சிலர் வீட்டை காலி செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதிரியான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை என்கிற நிலை இருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு  சட்டமுன்வடிவை கொண்டு வந்தார். அதில், இந்து சமய அறநிலைய கொடை சட்டம் 79 பி பிரிவில் 3ம் உட்பிரிவின் படி ஆணையரின் எழுத்து வடிவிலான புகார் ஒன்றின் பேரினாலன்றி அற அல்லது சமய நிறுவனம் அல்லது நிலைக்கொடை ஒன்றுக்கு சொந்தமான சொத்து எதனின் சட்ட விரோதமான உடமையுடன் தொடர்புடைய குற்றத்தினை நீதிமன்றம் எதுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளுதல் ஆகாது. கூறப்பட்ட குற்றமானது கடுமையான தன்மைக்கு வாய்ந்ததாகும். எனவே, சமய நிறுவனத்தின் பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள நபர் எவராலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான குற்றவியல் புகாரானது தாக்கல் செய்யப்படலாம் என்று சட்டதிருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்ட திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் யார் புகார் அளித்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வருங்காலங்களில் யார் புகார் அளித்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/2WxHpTq