சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வந்த வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால், வளி மண்டல மேல் அடுக்கில் காற்றுசுழற்சி உருவாகி மழை பெய்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதம் வரை 39 செமீ மழை பெய்துள்ளது. இயல்பாக, இந்த பருவத்தில் தமிழகத்தில் 33 செமீ அளவுக்கு மழை பெய்ய வேண்டும். இந்த முறை 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில் 7 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதையடுத்து, அக்டோபர் 20ம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில், பெரும்பாலான இடங்களில் காலையில் இருந்தே மிதமான மழை பெய்து கொண்டு இருந்தது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கை முதல் தமிழக கடலோரப் பகுதி வரையில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/39ULVhC