சென்னை: தமிழகத்தில் தொடங்க உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு 1600 இடங்கள் கூடுதலாக தமிழகத்துக்கு கிடைக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 25  அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, அந்த கல்லூரிகள் தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில்,  தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியைப் பெறும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. நீலகிரி, விருதுநகர், திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாமக்கல் ஆகிய இடங்களில் அமைய உள்ள  கல்லூரிகளுக்கான ஆய்வுப் பணியை ஒன்றிய அரசு நடத்தி முடித்து, அதற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கல்லூரிகள் இந்த ஆண்டில் செயல்படும் பட்சத்தில் 850 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். மீதமுள்ள கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகை, அரியலூர் ஆகிய கல்லூரிகளுக்கான அனுமதி அக்டோபர் மாதம்  இரண்டாவது வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2வது வாரத்தில் மத்திய மருத்துவ அதிகாரிகள்  குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வின் முடிவுகளும் அக்டோபர் 2வது வாரத்தில் வெளியாக உள்ளது. அதனால் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மேற்கண்ட 11 கல்லூரிகள் செயல்பட தொடங்கினால் 1600 இடங்கள் மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3umMHgO