மாமல்லபுரம்: தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, மாமல்லபுரம் அரசு பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நேற்று நடந்தது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. பல மாநிலங்களில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், தமிழகத்திலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகளை நடத்தவும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சுழற்சிமுறையில் பாடங்களை நடத்த வேண்டும். கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியை திறந்து, வகுப்பறைகளை கிருமி நாசினி தெளித்து, பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மேலும், பள்ளி வளாகத்தை சுற்றி இருந்த செடி, கொடிகளை பொக்லைன் மூலம் அகற்றினர். பல மாதங்களுக்கு, பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3zKk2nG