சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பிச்சுப்பிள்ளை தெருவில் சுமார் 2166 சதுர அடி மனை வேதாச்சலம் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த மனை கோயிலுக்கு மிகவும் அருகாமையில் இருந்த நிலையில், பல ஆண்டுகளாக வாடகை தரவில்ைல. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை தகவல் தெரிவித்தும், ரூ.8.50 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தவில்லை. எனவே, அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆகஸ்ட் 27ம் தேதி நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து வாடகைதாரரின் வாரிசுதாரர் விஜயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மீண்டும் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், நீதிமன்றம்  சட்டரீதியாக நடவடிக்கைகள் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அங்கிருந்து அகற்ற ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோயில் இணை ஆணையர் காவேரி தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து 2166 சதுர அடி மனையை மீட்டனர். இந்த மனையின் மதிப்பு ரூ.5 கோடி என கோயில் தரப்பில் கூறப்பட்டது.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/38t3FjB